மீண்டும் குழந்தை மணம். குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.04.1932 

Rate this item
(0 votes)

பால்ய விவாகத் தடைச்சட்டமாகிய சாரதா சட்டம் தோன்றிய நாள் முதல் அதற்கு உண்டான ஆபத்துக்கள் அளவற்றவை, வைதீகர்கள் அதை ஒழிப்பதற்குச் சூழ்ச்சிகள் பல செய்து கொண்டு வந்தார்கள். காங்கிரஸ் காரர்களின் சட்ட மறுப்பு ஒருபுறம். அச்சட்டத்தை அமல்நடத்தாமல் தடை செய்து கொண்டு வந்தது. அரசாங்கத்தாரின் அலட்சியப் புத்தி ஒருபுறம் பெருந்தடையாக இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது அச்சட்டமே செல்லத்தக்கது அல்ல என்பதற்குத் தகுந்த ஆதாரம் அகப்பட்டு விட்டது. 

திரு. வசந்த குமாரதாஸ் என்பவர், 14 வயதுக்கு உட்பட்ட தனது மகளை மணஞ்செய்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்ததைத் தடை செய்திருந்தும். தடை யுத்தரவை மீறி விவாகம் நடத்தப்பட்டது. அதன் பின் ஜில்லாக் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டு, பேக்கர் கஞ்ச் ஜில்லா நீதிபதி, திரு.வசந்த குமாரதாசை சிவில் ஜெயிலுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். இவ் வுத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கல்கத்தா ஹைக்கோர்ட்டுக்கு விண்ணப்பித்து "1780, 1797 ஆகிய வருஷங்களில் பார்லிமெண்டில் நிறைவேறிய கிழக்கிந்திய கம்பெனிச் சட்டங்கள் இன்னும் ரத்தாகாம லிருக்கும்போது ஒரு இந்து தனது மகளை விவாகம் பண்ணிக் கொடுப்பதற்கு உள்ள உரிமையையும், அதிகாரத்தையும் மறுக்க முடியாது” என்று விவாதிக்கப்பட்டது. ஹைக்கோர்ட்டு நீதிபதிகளும் இதை ஒப்புக் கொண்டு ஜில்லா நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். 

இவ்வழக்கினால் சாரதா சட்டம் பயனற்றதெனத் தெரிந்துவிட்டது. 

இவ்வழக்கில் எடுத்துக் காட்டப்பட்ட 1780ஆம் வருஷத்திய கிழக்கிந்திய கம்பெனிச் சட்டத்தில் 18வது விதியில் "சுதேசிகளுடைய பழக்க வழக்கங்களுக்குச் சாதகமளிக்கும் பொருட்டு இந்து, முகம்மதிய சட்டங்களின் படியும், அக்குடும்பங்களின் வழக்கப்படியும் குடும்பத்தின் தந்தைக்கும். முதலாளிக்கும் உள்ள உரிமையில் தலையிடுவதில்லை என்று பார்லிமென்ட் தீர்மானிக்கிறது. இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் செய்து கொள்ளும் காரியங்கள் இங்கிலாந்து சட்டங்களுக்கு விரோதமாக இருந்தாலும் அவை குற்றமாகா” என்றும்,  1797வது கிழக்கிந்திய கம்பெனிச் சட்டத்தில் 12வது பிரிவில் “சுதேசி களின் சமூகப்பழக்க வழக்கங்களுக்குப்பாதகம் ஏற்படாதிருக்கும் பொருட்டு குடும்ப சம்பந்தமாக இந்து, முஸ்லீம் தந்தைகளுக்கும், முதலாளிகளுக்கும் உள்ள உரிமையில் எத்தகைய கோர்ட்டு நடவடிக்கையும் தலையிடக்கூடாது என இச்சட்டம் கட்டளையிடுகிறது” என்றும் இருக்கின்றன. 

இந்தப் பழைய துருப்பிடித்த சட்டங்கள் தான் இப்பொழுது சாரதா சட்டத்திற்கு ஆபத்தை விளைவித்ததாகும். 

இனி சாரதா சட்டம் பயன்பட வேண்டுமானால், பார்லிமெண்டின் இந்தப் பழய சட்டங்கள் ரத்தாக வேண்டும். அல்லது சாரதா சட்டத்தில், பழய சட்டங்களில் உள்ள இவ்விதிகள் செல்லத்தக்கவைகள் அல்லவெனக் குறிப்பிடப்படவேண்டும். சாரதா சட்டத்தை நிறைவேற்றிய ஆரம்ப காலத் திலேயே இதைக் கவனித்திருந்தால் இப்பொழுது இத்தகைய சங்கடம் ஏற்பட இடமிருந்திருக்காது. 

இவ்விரண்டு காரியங்களைச் செய்யும் விஷயத்திலும் பல சங்கடங் கள் ஏற்படக்கூடும். நமது நாட்டு வைதீகர்களும், அவர்களுக்குச் சாதகமாக இருக்கும் அரசியல் கிளர்ச்சிக்காரர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். 

ஒரு சமயம், இந்திய அரசாங்கத்தாரின் முயற்சியினால், பார்லி மெண்டில் பழய சட்டங்கள் முழுவதையுமோ, அல்லது அவற்றில் உள்ள மேற்காட்டிய பிரிவுகளையோ ரத்துச்செய்வதற்கு ஏற்பாடாகுமானால், நமது வைதீகர்கள், அரசாங்கம். பழைய வாக்குறுதிகளை மீறுகிறதென்றும். மதத்தில் தலையிடுகின்றதென்றும் கூறி அரசாங்கத்தின் மேல் பழி தூற்ற ஆரம்பித்து விடுவார்கள். இதை வருணாச்சிரமதரும அரசியல் கிளர்ச்சிக் காரர்களும், அரசாங்கத்தைத் தூற்றுவதற்கு ஒரு ஆதாரமாக வைத்துக் கொள்ளுவார்கள். ஆகையால். இச்சமயத்தில், அரசாங்கத்தார். மேற்கண்ட பழைய சட்டங்க ளையோ அல்லது அவற்றில் உள்ள மேற்காட்டிய விதிகளையோ ரத்துச் செய்ய முன்வரமாட்டார்களென்றே நினைக்கின்றோம். 

இனி சாரதா சட்டத்தில் ஷை விதிகள் செல்லத்தக்கவையல்ல வென்று விதி ஏற்படுத்தவும் தற்சமயமுள்ள சட்டசபையில் இயலாதென்பது நிச்சயம். சென்ற கூட்டங்களில் விதவைகளுக்குச்சொத்துரிமையளிக்கும் மசோதாவும், விவாக விடுதலை மசோதாவும் அடைந்த கதியைப் பார்த்தால் விளங்கும். 

இனிச் சட்ட நிபுணர்களின் அபிப்பிராயத்தைப் பார்த்தாலோ அவர் களும் வேறு வேறு அபிப்பிராயப்படுகிறார்கள். இந்தியா சட்டசபைக்கு இத்தகைய சட்டஞ் செய்ய உரிமை உண்டு என்று கூறுவோர் சிவர். இத்தகைய சட்டஞ்செய்ய உரிமை இல்லையென்று சொல்லுவோர் சிலர். ஆகவே இந்த வகையிலும் முரண்பட்ட அபிப்பிராயமே இருந்து வருகிறது. 

 

ஆனால் எந்தச் சங்கடத்தையும் அரசாங்கம் கண் வைத்தால் நீக்கி விடலாம். இனி அரசாங்கம் இவ்விஷயத்தில் என்ன செய்யப்போகிறது என்பது தான் நமது கேள்வி. 

உண்மையிலேயே நமது இந்திய அரசாங்கம். இந்தியர்களின் முன்னேற்றத்தில் நோக்கமுள்ளதாயிருந்தால் சாரதா சட்டத்தைப் பயனுடை யதாகச் செய்ய வேண்டும். அல்லது மேற்கண்ட பழைய பார்லிமெண்ட் சட்டமாகிய மனுஸ்மிருதிகளை ரத்துச் செய்ய முயலவேண்டும். இரண்டு மல்லாமல் ஏனாதானாவென்று இருக்குமானால், சீர்திருத்தக்காரர்கள் வெள்ளைக்கார அரசாங்கத்தின் மேல் வைத்திருக்கும் சிறிது ம்பிக்கையும் ஒழிந்து போகும். 

திரு. ஹரிவிலாச சாரதா அவர்களும், சளைக்காமல், இதற்கான முயற்சியைச் செய்வாரென்றே எதிர் பார்க்கிறோம். நாமும் நாடெங்கும் கூட்டங்கள் கூட்டிப் பழைய சட்டங்களை ரத்துச் செய்ய முயலும்படியும், சாரதா சட்டத்தைத் திருத்தும் படியும். அரசாங்கத்தாரை வற்புறுத்துவதாகத் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். 

இளங் குழந்தைகளை மணம் புரிந்து கொடுப்பது குற்றம் என்று அறிவதற்குப் புத்தியில்லாத வைதீகர்களுக்குச் சட்டத்தினால் அறிவு புகட்ட வேண்டிய நிலையில் நமது நாடு இருக்கின்றது. இந்தப் புத்திசாலிகள் பூரண சுயேச்சை கேட்கின்றார்கள் என்று நம்மைப் பிறர் ஏளனம் பண்ணுவதில் என்ன தவறு இருக்கின்றது என்றே நாமும் கேட்கிறோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.04.1932

 
Read 40 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.